'செல்லாது.. செல்லாது'; இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்த உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
இலங்கையில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம், அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் குழுவை கூண்டோடு கலைத்த விளையாட்டு அமைச்சரின் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அமைச்சரால் நீக்கப்பட்ட நிர்வாகிகளையும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) மீண்டும் அதே பணியில் அமர்த்திய நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தொடர்ந்து விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழுவை கலைத்து இடைக்கால குழுவை அமைக்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க திங்கட்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து நிர்வாக குழுவின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. "கிரிக்கெட் வாரிய நிர்வாக குழுவை மீட்டெடுக்க இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அமைச்சரின் நடவடிக்கையின் பின்னணி
தற்போது இந்தியாவில் நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பையில் படுதோல்வியை சந்தித்த இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு எதிராக 55 ரன்களில் சுருண்டது அந்நாட்டு விளையாட்டு அமைச்சகத்தை அதிருப்தியில் ஆழ்த்தியது. மேலும், இலங்கையின் பணக்கார விளையாட்டு அமைப்பான கிரிக்கெட் வாரியம் கடந்த பல மாதங்களாக ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்தும் அதிருப்தியில் இருந்த அமைச்சர் ரணசிங்க, சரியாக நேரம் பார்த்து வாரிய குழுவை கலைத்தார். எனினும், தற்போது இலங்கை அமைச்சரின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது அமைச்சகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.