Virat Kohli 50th Century : இதயத்தை தொட்ட விராட் கோலி; சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. விராட் கோலி இந்த போட்டியில் சதமடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50வது சதத்தை பதிவு செய்தார். 106 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் அவர் 100 ரன்களை எட்டினார். முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், கொல்கத்தாவில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் போது கோலி சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதங்களின் சாதனையை சமன் செய்த நிலையில், தற்போது அதை முறியடித்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
விராட் கோலி தனது சாதனையை சமன் செய்தபோது விரைவில் முறியடிக்க வாழ்த்து தெரிவித்திருந்த சச்சின் டெண்டுல்கர் தற்போது, சாதனை முறியடிக்கப்பட்ட பிறகு விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஒரு இந்தியர் தனது சாதனையை முறியடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார். மேலும், "இந்திய டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, அணியினர் என் கால்களைத் தொடும்படி உங்களை கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அந்த சிறுவன் ஒரு 'விராட்' வீரராக வளர்ந்துவிட்டார்." என்று பதிவிட்டுள்ளார்.