2019இல் தோனி, 2024இல் டெண்டுல்கர்; இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேசிய அடையாளம்
கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கரை, தேசிய அடையாளமாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதையடுத்து, தேர்தல் செயல்முறையில் அதிக வாக்காளர்களை பங்கேற்க வைக்க அவர்களை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபடுவார். புதுடெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கருடன் மூன்றாண்டு காலப் புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) கையெழுத்தானது. ஒப்பந்தம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஒத்துழைப்பு, வரவிருக்கும் தேர்தல்களில், குறிப்பாக 2024 பொதுத் தேர்தலில் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்க வைக்கும் முயற்சியின் ஒரு குறிப்பிடத்தக்க படியாக இருக்கும்." என்று தெரிவித்துள்ளது.
சமூகத்தில் புகழ்பெற்றவர்களை தேசிய அடையாளமாக நியமிக்கும் தேர்தல் ஆணையம்
சச்சின் டெண்டுல்கருடனான இந்த ஒப்பந்தம் மூலம், இந்திய தேர்தல் ஆணையம் நகர்ப்புற மக்கள் மற்றும் இளைஞர்கள் வாக்களிப்பதில் காட்டும் அக்கறையின்மை போன்ற சவால்களை முறியடிக்க முயற்சி செய்ய உள்ளது. தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்க வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்தியர்களை தனது தேசிய அடையாளங்களாக அவ்வப்போது நியமனம் செய்கிறது. முன்னதாக, கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் முன்னதாக, 2019 லோக்சபா தேர்தலின் போது, எம்எஸ் தோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் போன்ற முக்கிய நபர்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.