வெள்ளிப்பதக்கத்தை மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணித்த இந்திய வீராங்கனை
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை வுஷு போட்டியில் வெள்ளி வென்ற ரோஷிபினா தேவி தனது வெள்ளிப் பதக்கத்தை மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணித்து நெகிழ வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக வன்முறை மோதல்களைக் கண்டுவரும் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான அவர், ஹாங்சோவில் வியாழக்கிழமை பதக்கம் வென்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மோதலுக்கு பிறகு வீட்டிற்குத் திரும்பிய தனது குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார். பல மாதங்களாக குடும்பத்தை விட்டு விலகியிருந்து, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அவரது பயணம் நிறைய தியாகங்கள் மற்றும் கஷ்டங்களை உள்ளடக்கியது. சில சமயங்களில் தன் மாநிலத்தில் உள்ள சூழ்நிலையால் அவர்களுடன் மீண்டும் பேச முடியாமல் போய்விடுமோ என்று கூட கவலைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக தங்கம் வெல்வதே லட்சியம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா பல பதக்கங்களை வாரிக்குவித்து வரும் நிலையில், வுஷுவில் வெள்ளி வென்று மணிப்பூரில் உள்ள பிஷ்னுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஷிபினா தனி கவனம் ஈர்த்துள்ளார். போட்டிக்கு பிறகு பேசிய அவர், தான் சில தவறுகளை செய்ததால் தங்கப்பதக்கத்தை தவறவிட்டதாகக் கூறினார். மேலும், நாட்டுக்காக தங்கம் வெல்வதே லட்சியம் என்றும், அடுத்த முறை நிச்சயம் அதை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பிறகு நாடு திரும்பினாலும், தனது சொந்த ஊருக்கு அவர் செல்ல முடியாத நிலையே உள்ளதால், பதக்கம் வென்றும் சோகத்தில் உள்ளார்.