ஹிட்மேனுக்கு பத்மஸ்ரீ மகுடம்! இந்திய கிரிக்கெட்டின் வரலாற்று நாயகன் ரோஹித் சர்மாவின் பயணம் ஒரு பார்வை
செய்தி முன்னோட்டம்
2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார். இதில் விளையாட்டு துறையில் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ரோஹித் சர்மாவுக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட உள்ளது. வழக்கமான பாணியில் விளையாடும் திறமை, இக்கட்டான சூழலில் நிதானத்தை கடைப்பிடிக்கும் தலைமை பண்பு ஆகியவற்றால் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக திகழும் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மாவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 38 வயதான ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி பொற்காலத்தை கண்டது. இவரது தலைமையில் இந்தியா, 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்து இரண்டு ஐசிசி (ICC) கோப்பைகளை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
பயணம்
போரிவல்லி டூ பத்மஸ்ரீ: ரோஹித் ஷர்மாவின் பயணம்
மும்பையின் போரிவல்லி தெருக்களில் கிரிக்கெட் விளையாடி வளர்ந்த ரோஹித்தின் பயணம், விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 2007-ல் அறிமுகமான போது தடுமாற்றத்தைச் சந்தித்தாலும், தொடக்க வீரராக களம் இறங்கிய பின் கிரிக்கெட் உலகையே தன்வசப்படுத்தினார். ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே வீரர் மற்றும் இலங்கைக்கு எதிராக அவர் எடுத்த 264 ரன்கள் இன்றும் ஒரு முறியடிக்க முடியாத சாதனையாகவே உள்ளது. தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரோஹித், 50 ஓவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலக கோப்பையை வெல்வதே இவரது அடுத்த இலக்காக உள்ளது.