ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக டெஸ்ட் கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவை நியமிக்க பிசிசிஐ திட்டம்
ஜூலை 12ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் (2023-25) ஒரு பகுதியாக நடக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடருடன் இந்திய அணி, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்ததால், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் ரோஹித் ஷர்மாவுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்க பிசிசிஐ தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு ஓய்வளித்துவிட்டு, அஜிங்க்யா ரஹானேவை இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேப்டன்சி பொறுப்புக்கு அஜிங்க்யா ரஹானேவை தேர்வு செய்வதன் பின்னணி
இந்தியாவிற்கான புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி அடுத்த மாதம் தொடங்கும் நிலையில், அணியின் டெஸ்ட் கிரிக்கெட் அமைப்பில் அதிகபட்ச மாற்றங்கங்களுக்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தற்போது சிறப்பான ஃபார்மில் இல்லாத மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக பேட்டிங் செய்த அஜிங்க்யா ரஹானேவை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 2021-22ல் ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா மோசமாக தோற்றதை அடுத்து விராட் கோலி நாடு திரும்பியதால், அவருக்கு பதிலாக கேப்டனாக செயல்பட்டு அஜிங்க்யா ரஹானே, இந்தியாவுக்கு இரண்டாவது டெஸ்டில் வெற்றியை பெற்று கொடுத்ததால், அவரை மீண்டும் தற்காலிகமாக கேப்டன்சிக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.