அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன்! ரோஹித் சர்மா சாதனை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது ஒன்பதாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 56 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரோஹித், இரண்டாவது நாளில் (பிப்ரவரி 10) 100 ரன்களை கடந்தார். இதன் மூலம் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றார். சுமார் 11 மாதங்களுக்கு பிறகு ரோஹித் தனது முதல் டெஸ்டில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2022 இல், அவரது தலைமையின் கீழ் இந்தியா 2-0 என்ற கணக்கில் இலங்கையை தோற்கடித்தது. இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டுக்கு முன்னதாக ரோஹித் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெஸ்டில் ரோஹித் சர்மாவின் செயல்திறன்
இந்திய அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடும் ரோஹித், 46 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அவர் இதுவரை 46க்கும் அதிகமான சராசரியுடன் 3,200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதில் 9 சதங்களும் 14 அரைசதங்களும் அடங்கும். ஒரு தொடக்க ஆட்டக்காரராக அவர் 6 டெஸ்ட் சதங்களை வைத்துள்ளார். உள்நாட்டில் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் சராசரி 75க்கும் அதிகமாக உள்ளது. 15 டெஸ்ட்களுக்கு மேல் விளையாடிய பேட்டர்களில் அவரது உள்நாட்டு சராசரி இரண்டாவது சிறந்ததாகும். ஹோம் டெஸ்டில் 98.22 சராசரியுடன் முடித்த சர் டொனால்ட் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் ரோஹித் மட்டுமே உள்ளார். ரோஹித் தனது ஒன்பது டெஸ்ட் சதங்களில் எட்டு சதங்களை சொந்த மண்ணில் அடித்துள்ளார். இதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும்.