ஆசிய கோப்பை இறுதிப்போட்டி : சச்சின், தோனியின் சாதனையை சமன் செய்வாரா ரோஹித் ஷர்மா?
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெற உள்ள நிலையில், 8வது முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியில் இந்தியா இலங்கையை எதிர்கொள்கிறது. முன்னதாக, கடந்த 2022 சீசனில் ஆசிய கோப்பையை வென்ற இலங்கை இந்த முறை கோப்பையை தக்கவைக்க கடுமையாக போராடும். இதற்கு முன்னதாக இரு அணிகளும் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் ஏழு முறை நேருக்கு நேர் மோதியதில் இந்தியா அதிகபட்சமாக 4 முறை வென்றுள்ளது. எனினும், இந்தியா மூன்று முறை தோற்றதில் இரண்டு போட்டிகள் இலங்கையில் நடந்தவை என்பது இதில் கவனிக்கத்தக்கது. இதற்கிடையே, இந்த போட்டியில் முக்கிய மைல்கற்கள் மற்றும் சாதனையை படைக்க காத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மீதுதான் தற்போது அனைவரது பார்வையும் உள்ளது.
ரோஹித் ஷர்மா படைக்க வாய்ப்புள்ள சாதனைகள்
ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டி ரோஹித் ஷர்மாவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 250வது போட்டியாகும். போட்டி தொடங்கும்போது இந்த மைல்கல்லை எட்டும் 9வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். ரோஹித் ஷர்மா (939 ரன்கள்) ஒருநாள் வடிவ ஆசிய கோப்பையில் 1,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க இன்னும் 61 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இந்த பட்டியலில், தற்போது சச்சின் டெண்டுல்கர் 971 ரன்களுடன் இந்தியர்களில் முதலிடத்தில் உள்ளார். இந்த போட்டியில் இந்தியா வென்றால், எம்எஸ் தோனி (2012 மற்றும் 2016) மற்றும் அஸாருதீனுக்கு (1991 மற்றும் 1995) பிறகு இரண்டு முறை ஆசிய கோப்பை கோப்பையை வென்ற 3வது இந்திய கேப்டன் ஆவார்.