'கேப்டன்சி எனக்கு இரண்டாம்பட்சம்தான்' : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா
இன்னும் இரண்டு மாதங்களில் இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கோப்பை போட்டிகளில் விளையாட தயாராகி வரும் நிலையில், கேப்டன் ரோஹித் ஷர்மா அணிக்கு வெற்றியை பெற்றுத் தர கடுமையாக தயாராகி வருகிறார். ஏற்கனவே ஒருமுறை இந்திய அணியை ஆசியக் கோப்பையை வெல்வதற்கு ரோஹித் ஷர்மா வழிவகுத்திருந்தாலும், கேப்டனாகவோ அல்லது வீரராக ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லவில்லை. தலைமைப் பொறுப்பில் இருந்து விராட் கோலி வெளியேறிய பிறகு, கேப்டன் பதவியைப் பெற்றுள்ள ரோஹித், தற்போது அடுத்தடுத்து வரும் இரண்டு கோப்பைகளையும் வெல்வதில் ஆர்வமாக உள்ளார். இருப்பினும், தனக்கு 'கேப்டன்சி' என்பது இன்னும் இரண்டாம்பட்சமாகவே இருப்பதாக தெரிவித்துள்ள ரோஹித் ஷர்மா, ஒரு பேட்டராக அணியில் தனது பங்கு முதன்மையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
காயங்களுக்கு பயப்படுகிறேன் : ரோஹித் ஷர்மா
2013 சாம்பியன்ஷிப் டிராபிக்கு பிறகு, 10 ஆண்டுகளாக ஒரு ஐசிசி கிரிக்கெட் கோப்பையையும் வெல்ல முடியாமல் இந்தியா போராடி வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) பேட்டியளித்த ரோஹித் ஷர்மா, "உலகக்கோப்பையை வெல்வது ஒரு கனவு. அதற்காக இங்கு போராடுவதை விட மகிழ்ச்சியைத் தரக்கூடிய விஷயம் எனக்கு எதுவும் இல்லை." என்று தெரிவித்தார். மேலும், உலகக்கோப்பைக்கு முன்னதாக கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் கிடைக்காத நிலையில், இப்போது காயங்கள் குறித்து பயப்படுவதாக ரோஹித் கூறினார். இதனால்தான், வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சில வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதாகக் கூறினார். வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் கோலி, ரோஹித் மற்றும் ஜடேஜா போன்றோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.