வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தான் கேப்டன்
இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது 2023-25 புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் போட்டியாகும். முன்னதாக, முந்தைய இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிகளில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியது. முதல் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியிடம் தோல்வியைத் தழுவிய இந்தியா, சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாவது இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கேப்டன்ஷிப் எதிர்காலம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது.
கேப்டன் பதவியில் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம்
ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி குறித்து வெளியான தகவல்களின்படி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு ரோஹித் ஷர்மாவே இந்திய அணியை வழிநடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு பிறகு, அடுத்த டெஸ்ட் தொடர் டிசம்பரில்தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாட உள்ளது. தற்போது தொடங்க உள்ள 2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி முடியும்போது ரோஹித் ஷர்மாவுக்கு 38 வயது ஆகியிருக்கும். அந்த சமயத்தில் ரோஹித் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், அடுத்த டெஸ்ட் தொடருக்கு போதுமான கால அவகாசம் உள்ளதால், இது குறித்தும் ஆலோசித்து பின்னர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.