ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்தியர்; ரோஹித் ஷர்மா சாதனை
ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்சர்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கேப்டன் ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார். சனிக்கிழமை (அக்டோபர் 14) அகமதாபாத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை மோதலில் அவர் தனது மூன்றாவது சிக்சர் மூலம் இந்த மைல்கல்லை எட்டினார். தனது 254வது ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா இந்த இலக்கை எட்டியுள்ளார். மேலும், சர்வதேச அளவில் ஷாஹித் அப்ரிடி மற்றும் கிறிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்சர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். முன்னதாக, சமீபத்தில் அவர் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில் 150 சிக்சர்கள் நடித்துள்ள ரோஹித் ஷர்மா
ரோஹித் தற்போது 303 சிக்சர்கள் நடித்துள்ள நிலையில், இதில் அதிகபட்சமாக 150 சிக்சர்களை உள்நாட்டில் எடுத்துள்ளார். உள்நாட்டில் அதிக சிக்சர்கள் அடித்ததில் ரோஹித் ஷர்மா சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ள நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெயில் (147) உள்ளார். வெளிநாட்டில் ஒருநாள் போட்டிகளில் 92 சிக்சர்கள் அடித்துள்ள ரோஹித் ஷர்மா, அப்ரிடி (134) மற்றும் கெய்ல் (99) ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். நடுநிலையான மைதானங்களில் ரோஹித் 59 சிக்சர்கள் அடித்துள்ளார். முன்னதாக, டெல்லியில் நடந்த முந்தைய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்வதேச அளவில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் ஆனார். ரோஹித் தற்போது 454 சர்வதேச போட்டிகளில் 559 சிக்சர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.