CT 2025: ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா
செய்தி முன்னோட்டம்
வியாழக்கிழமை (பிப்ரவரி 20) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி 2025 ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார்.
ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்களை எட்டிய இரண்டாவது வேகமான வீரர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா இதில் பெற்றார்.
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்ஸ்களில் 11,000 ரன்களை எட்டியதே இரண்டாவது அதிவேகமானதாக இருந்த நிலையில், ரோஹித் ஷர்மா 261 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
அதேநேரம், 11,000 ஒருநாள் ரன்களை வேகமான எட்டிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி தக்கவைத்துள்ளார். அவர் 2019 இல் 222 இன்னிங்ஸ்களில்இந்த சாதனையை படைத்தார்.
இந்திய வீரர்கள்
ஒருநாள் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை எடுத்த இந்திய வீரர்கள்
இந்த மைல்கல் சாதனையுடன், ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை எட்டிய நான்காவது இந்திய வீரராக ரோஹித் ஷர்மா உருவெடுத்துள்ளார்.
இதற்கு முன்னர், மேலே குறிப்பிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோருடன் சவுரவ் கங்குலி மட்டுமே 11,000 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பந்துவீசிய இந்தியா 228 ரன்களுக்கு வங்கதேச கிரிக்கெட் அணியை சுருட்டியது.
அடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியா, இதை எழுதும் நேரத்தில் 104/1 என ஆடி வருகிறது.
ரோஹித் ஷர்மா 41 ரன்களில் அவுட்டான நிலையில், ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி களத்தில் உள்ளனர்.