ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது அதிக ரன் குவித்த இந்தியர் ஆனார் ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2007இல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான ரோஹித் ஷர்மா, கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நடைபெற்ற போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (18,426), விராட் கோலி (13,848), மற்றும் சவுரவ் கங்குலி (11,221) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து 10,768 ரன்களுடன் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நான்காவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது அவரைக் கடந்து ரோஹித் ஷர்மா நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 1,000 பவுண்டரிகள் அடித்த ஐந்தாவது இந்தியர்
ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையோடு, சர்வதேச கிரிக்கெட்டில் 1,000 பவுண்டரிகள் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் ஷர்மா இந்த தொடரின் முதல் போட்டியில் படைத்தார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (2,016), விராட் கோலி (1,296), வீரேந்திர சேவாக் (1,132), மற்றும் சவுரவ் கங்குலி (1,122) ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர். இதற்கிடையே, இலங்கை தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், ரோஹித் ஷர்மா, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 13,000 ரன்களைக் கடந்ததோடு, சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிவேகமாக 15,000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.