IND vs PAK : டாஸ் போட 5 நிமிடங்கள் இருக்கும்போது கேஎல் ராகுலை அழைத்த ரோஹித் ஷர்மா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டிக்கான இந்திய அணியின் விளையாடும் லெவனில் கேஎல் ராகுலை சேர்க்கும் முடிவு டாஸ் போட 5 நிமிடம் இருக்கும்போதுதான் எடுக்கப்பட்டதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். முன்னதாக, 2016 ஐபிஎல் சீசனின் போது, காயின் டாஸ் செய்வதற்கு சற்று முன் மந்தீப் சிங் காயம் அடைந்ததை அடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விளையாடும் லெவன் அணியில், கேஎல் ராகுல் இடம் பெற்றார். அதில், விராட் கோலியுடன் சேர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல், ஒரு அரை சதம் அடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு கோலியுடன் சேர்ந்து சதமடித்து 2016 சம்பவத்தை கேஎல் ராகுல் நினைவுபடுத்தியுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் விலகலால் கிடைத்த வாய்ப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் நம்பர் 4 இடத்திற்கு ஷ்ரேயாஸ் ஐயரை களமிறக்கவே அணி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஆனால், போட்டி தொடங்கும் முன் கடைசி நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகுவலியால் அவதிப்பட்டதால், அவர் நீக்கப்பட்டு, கேஎல் ராகுலுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, "விராட்டின் இன்னிங்ஸ் அருமையாக இருந்தது. நாங்கள் கேஎல் ராகுலிடம் டாஸ் போட ஐந்து நிமிடம் இருக்கும்போதுதான் தயாராக சொன்னோம். ஆனால், அவர் உறுதியுடன் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டார். இது அவரது மன உறுதியைக் காட்டுகிறது." எனக் கூறினார்.