விம்பிள்டன் 2023 : அரையிறுதியில் ரோஹன் போபண்ணா ஜோடி அதிர்ச்சித் தோல்வி
விம்பிள்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஆகியோர் வியாழக்கிழமை (ஜூலை 13) நடந்த அரையிறுதியில் தோல்வியைத் தழுவினர். இரட்டையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரான நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹாஃப் மற்றும் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்க் ஆகியோரை எதிர்கொண்ட, தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள போபண்ணா மற்றும் எப்டன் ஜோடி ஒரு மணி நேரம் 26 நிமிடங்கள் போராடி 5-7, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்தனர். முன்னதாக, காலிறுதியில் போபண்ணா மற்றும் எப்டன் ஜோடி 6-7(3) 7-5 6-2 என்ற கணக்கில் டச்சு ஜோடியான டாலன் கிரீக்ஸ்பூர் மற்றும் பார்ட் ஸ்டீவன்ஸ் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விம்பிள்டனில் வரலாறு படைக்கும் வாய்ப்பை இழந்த ரோஹன் போபண்ணா
விம்பிள்டன் 2023இல் பங்கேற்ற ஒரே இந்திய டென்னிஸ் வீரரான ரோஹன் போபண்ணா, இறுதிப்போட்டி வரை முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றிருந்தால், புதிய வரலாறு படைத்திருப்பார். அதாவது, 43 வயதான ரோஹன் போபண்ணா இதில் பட்டம் வென்றிருந்தால், விம்பிள்டன் வரலாற்றில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என அனைத்து பிரிவிலும் சேர்த்து, கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கலாம். ஆனால் அரையிறுதியில் தோல்வி அடைந்ததன் மூலம் அந்த வாய்ப்பை இழந்துள்ளார். இதற்கிடையே, போபண்ணாவுக்கு இது மூன்றாவது விம்பிள்டன் அரையிறுதியாகும். மேலும் 2015 க்குப் பிறகு முதல் முறையாக அரையிறுதிக்கு தற்போது தான் முன்னேறியுள்ளார்.