உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார் ரிஷப் பண்ட்
செய்தி முன்னோட்டம்
நியூசிலாந்துக்கு எதிராக கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 39 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 23 ரன்கள் எடுத்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பண்ட் பெற்றுள்ளார். 44 போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட் இதுவரை 89 சிக்ஸர்களை விளாசி, 64 போட்டிகளில் 88 சிக்ஸர்கள் அடித்திருந்த இங்கிலாந்து முன்னாள் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 40 போட்டிகளில் 56 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
3,099 ரன்கள்
இந்தியாவின் அதிகபட்ச ரன் குவிப்பாளராக பண்ட் ஆதிக்கம்
அதிக சிக்ஸர்கள் சாதனை மட்டுமின்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் ரிஷப் பண்ட் தன்வசம் வைத்துள்ளார்.
44 டெஸ்ட் போட்டிகளில் (76 இன்னிங்ஸ்கள்) 7 சதங்கள் மற்றும் 18 அரைசதங்களுடன் 43.04 சராசரியில் 3,099 ரன்களை அவர் குவித்துள்ளார்.
நடப்பு 2026-ஆம் ஆண்டில் மட்டும் 5 டெஸ்ட் போட்டிகளில் 66.66 என்ற அபார சராசரியுடன் 400 ரன்கள் குவித்துள்ள பண்ட், முன்னதாக வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டிலும் 128 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார்.
356 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து
கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் இந்திய அணி தடுமாற்றம்
இதற்கிடையே, கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணி, நியூசிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் 356 ரன்களுக்குச் சுருட்டியது.
நியூசிலாந்து தரப்பில் டாம் லாதம் (59) மற்றும் தனது 50-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய டாம் பிளண்டெல் (89) ஆகியோர் சிறப்பாக விளையாடிய நிலையில், இந்தியத் தரப்பில் குர்னூர் பிரார் மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, கைல் ஜேமிசனின் வேகத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (0), தேவ்தத் படிக்கல் (21) மற்றும் கேப்டன் சுப்மன் கில் (17) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.