தி ஹன்ட்ரட் லீக் கிரிக்கெட்டில் இடம் பெறும் மூன்றாவது வீராங்கனை ஆனார் ரிச்சா கோஷ்
லண்டன் ஸ்பிரிட், இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷை தி ஹன்ட்ரட் 2023 கிரிக்கெட் எடிசனில் ஒப்பந்தம் செய்வதுள்ளதாக வியாழக்கிழமை (ஜூலை 13) அறிவித்தது. ஆஸ்திரேலியாவின் ஜார்ஜியா ரெட்மெய்னுக்குப் பதிலாக, லண்டன் ஸ்பிரிட் அணியில் மாற்று வீராங்கனையாக ரிச்சா கோஷ் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம், ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோருக்கு பிறகு, இங்கிலாந்தின் தனித்துவமான தி ஹன்ட்ரட் போட்டியில் பங்கேற்கும் மூன்றாவது இந்திய வீராங்கனை ஆகியுள்ளார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 19 வயது இளம் கிரிக்கெட் வீராங்கனையான ரிச்சா கோஷ், 2023 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் போது இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டார்.
லண்டன் ஸ்பிரிட் வீராங்கனைகளின் பட்டியல்
இந்திய கிரிக்கெட் அணிக்காக சிறப்பாக செயல்பட்டாலும், 2023 மகளிர் ஐபிஎல்லில் எட்டு போட்டிகளில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் வங்கதேச டி20 தொடரில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து லீக் கிரிக்கெட்டில் விளையாட கிடைத்த வாய்ப்பை ஏற்றுள்ளார். லண்டன் ஸ்பிரிட் கடந்த சீசனில் இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் தலைமையில் இரண்டு வெற்றிகளுடன் ஏழாவது இடத்தில் முடித்தது. லண்டன் ஸ்பிரிட் அணி : ஹீதர் நைட், ரிச்சா கோஷ், அமெலியா கெர், சார்லி டீன், டேனியல் கிப்சன், கிரேஸ் ஹாரிஸ், சாரா க்ளென், சோஃபி மன்ரோ, சோஃபி லஃப், கிரேஸ் ஸ்கிரிவன்ஸ், தாரா நோரிஸ், நியாம் ஹாலண்ட் லாரன் ஃபைலர், க்ளோ ஹில், ஆலிஸ் மோனகன்.