ரீவைண்ட் 2023 : ஒருநாள் உலகக்கோப்பையில் மறக்க முடியாத தருணங்கள்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது, இந்த ஆண்டில் கிரிக்கெட் உலகின் முக்கிய நிகழ்வாக உள்ளது. லீக் சுற்று மற்றும் நாக் அவுட் போட்டிகள் உட்பட மொத்தம் 48 போட்டிகள் கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்ட சில மறக்க முடியாத தருணங்களை உருவாக்கியது. வரலாற்றில் முதன்முறையாக மேத்யூஸ் டைம்டு அவுட் முறையில் அவுட்டானது, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் முழுமையான சரணாகதி, இலங்கையின் வீழ்ச்சி, தென்னாப்பிரிக்காவின் தொடரும் சோகம் என பல இதில் அடங்கும். இந்நிலையில், 2023ஆம் ஆண்டு முடியும்போது, இந்த தொடரில் நடந்த சில முக்கியமான தருணங்களை திரும்பி பார்க்கலாம்.
ஆறாவது முறையாக பட்டம் வென்றது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவியது. முதல் போட்டியில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 134 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்றது. இதனால், இனி ஆஸ்திரேலியாவின் நிலைமை அதோகதிதான் என நினைத்த வேளையில் பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து ஆஸ்திரேலியா, அதன் பின்னர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு வீழ்த்திய ஆஸ்திரேலியா, இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி முதல் இரண்டு போட்டிகளிலும் பெற்ற படுதோல்விக்கு பழிதீர்த்ததோடு, ஆறாவது முறையாக பட்டத்தையும் வென்றது.
தென்னாப்பிரிக்காவின் தொடர்ந்த சோகம்
இந்த தொடருக்கு முன்னர் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நான்கு முறை அரையிறுதிக்கு முன்னேறினாலும், இதுவரை ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லை. அந்த நிலையை இந்த முறை மாற்றும் என லீக் போட்டிகளில் அந்த அணி பெற்ற வெற்றி பல தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கும் நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால், அதற்கு முற்றிலும் நேர்மாறாக மீண்டும் அரையிறுதியில் தோற்று பரிதாபகரமாக வெளியேறியது. இந்தமுறை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு சுருண்டது. டேவிட் மில்லர் மட்டும் தனியொரு ஆளாக போராடி 101 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
ஒருநாள் உலகக்கோப்பையில் மூன்றாவது இரட்டை சதம்
லீக் சுற்றில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வதற்கான மோதலில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 19 ஓவர்களில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு படுதோல்வி நிச்சயம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிளென் மேக்ஸ்வேல் தனியொரு வீரராக 201 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மேலும், இதன் மூலம் ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது வீரர் ஆனார். இதற்கு முன்னர் 2015இல் இரண்டு இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரே உலகக்கோப்பை தொடரில் 500க்கும் மேல் ரன் குவித்த இரண்டு இந்திய வீரர்கள்
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக நட்சத்திர வீரர் விராட் கோலி 765 ரன்களுடன் தொடரில் அதிக ரன் குவித்தவராக முடித்தார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்த தொடரில் 597 ரன்களுடன் இரண்டாவது அதிக ரன் குவித்தவராக முடித்தார். இதன் மூலம் ஒரு சீசனில் இரண்டு இந்திய வீரர்கள் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த முதல் ஜோடி என்ற பெருமையை கோலி மற்றும் ரோஹித் பெற்றுள்ளனர். இதற்கிடையே, பந்துவீச்சில் இந்திய அணியின் முகமது ஷமி 24 விக்கெட்டுகளுடன் இந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளின் சோகம்
2019இல் உலகக்கோப்பை வென்ற கெத்துடன் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு இந்த சீசன் பரிதாபகரமான ஒன்றாக அமைந்துவிட்டது. மொத்தம் 9 லீக் ஆட்டங்களில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்ற இங்கிலாந்து மீதமுள்ள 6 போட்டிகளில் தோற்று புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் முடித்தது. இதற்கிடையே, இலங்கை அணி இந்த தொடரில் 9 ஆட்டங்களில் வெறும் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஒன்பதாவது இடத்தில் முடித்தது. இதன் மூலம் 2025இல் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தது. மேலும், இலங்கை கிரிக்கெட் அணியின் மேத்யூஸ் மைதானத்தில் தாமதமாக பேட்டிங்கைத் தொடங்கி டைம் அவுட் முறையில் அவுட்டான முதல் வீரர் என்ற சோகமான வரலாற்றையும் உருவாக்கினார்.