ரீவைண்ட் 2023 : ஐபிஎல் 2023 அறிந்ததும் அறியாததும்; சுவாரஸ்ய தருணங்கள்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024க்கான ஏலம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. முன்னதாக, ரிங்கு சிங்கின் சிறப்பான ஆட்டத்தில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸின் கடைசிப் பந்து வெற்றி வரை ஐபிஎல் 2023 எண்ணற்ற நினைவுகளை பொக்கிஷமாக வழங்கியுள்ளது. 10 அணிகளும் வரவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனுக்கு தங்களின் மிகச்சிறந்த அணியை கட்டமைக்க ஏலத்திற்கு தயாராகி வரும் இந்த நேரத்தில், ஐபிஎல் 2023 இன் போது நடந்த மறக்க முடியாத சில நிகழ்வுகளைப் பற்றி இதில் பார்க்கலாம்.
ஐந்தாவது முறையாக பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
2022 ஐபிஎல் சீசனில் படுதோல்வி அடைந்து வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2023 தொடரில் பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து வந்தது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோற்றாலும், அதன் பிறகு நடந்த போட்டிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. மேலும், முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதோடு, இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை கடைசி பந்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக பட்டம் வென்றது. இதன் மூலம் அதிக முறை ஐபிஎல் பட்டங்களை வென்று ஐபிஎல்லின் ராஜாவாக வலம் வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது.
ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் கேப் வென்றவர்கள்
குஜராத் டைட்டன்ஸ் அணி பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தாலும், ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் கேப்பை குஜராத் வீரர்களே வென்றனர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் 17 போட்டிகளில் விளையாடி 157.80 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 890 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களும் அடங்கும். பந்துவீச்சைப் பொறுத்தவரை முகமது ஷமி 17 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் இரண்டு முறை 4 விக்கெட் எடுத்துள்ளார். பேட்டிங்கில் அதிக ரன் குவித்தவருக்கு ஆரஞ்சு கேப்பும், பந்துவீச்சில் அதிக விக்கெட் எடுத்தவருக்கு பர்ப்பிள் கேப்பும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிவேக அரைசதம்
ஐபிஎல் 2023 தொடரில் மே 11 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற சாதனை படைத்தார். இந்த போட்டியில் கொல்கத்தா அணி 150 ரன்களை இலாக்காக நிர்ணயித்த நிலையில், ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடைசி வரை அவுட்டாகாமல் 98 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மேலும், 13 பந்துகளில் அரைசதம் எட்டி, ஐபிஎல்லில் அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன்னர் கேஎல் ராகுல் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் 14 பந்துகளில் 50 ரன்களை எட்டி கூட்டாக இந்த சாதனையை தக்கவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
5 பந்துகளில் 5 சிக்சர் விளாசிய ரிங்கு சிங்
ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. சாய் சுதர்ஷன் 53 ரன்களும், விஜய் சங்கர் 63 ரன்களும் எடுத்தனர். 205 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வெங்கடேஷ் ஐயர் 83 ரன்களும், நிதிஷ் ராணா 45 ரன்களும் எடுத்தாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் எப்படியும் குஜராத் வென்றுவிடும் என எதிர்பார்த்த நிலையில், கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் தொடர்ச்சியாக 5 பந்துகளில் ஐந்து சிக்சர்கள் விளாசி ஒரு பந்து மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றுக் கொடுத்தார்.
அதிக சதங்கள் அடிக்கப்பட்ட சீசன்
ஐபிஎல் 2023 தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு 12 சதங்கள் அடைக்கப்பட்டன. இதற்கு முன்னர் 2008 தொடரில் 8 சதங்கள் அடிக்கப்பட்டதே அதிகமாக இருந்த நிலையில் இந்த சீசனில் அது முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த முறை அடிக்கப்பட்ட 12 சதங்களில் ஷுப்மன் கில் அதிகபட்சமாக 3 சதங்களை அடித்துள்ளார். இது ஒரு சீசனில் ஒரு வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சதங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விராட் கோலி 2 சதங்கள் அடித்துள்ள நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், ஹென்றிச் கிளாசென், வெங்கடேஷ் ஐயர், பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்துள்ளனர்.
அதிக வயதில் கோப்பையை வென்ற எம்எஸ் தோனி
ஐபிஎல் 2023 தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றியதன் மூலம் அந்த அணி ஐந்தாவது முறையாக பட்டம் வென்றது. இதற்கு முன்னர் 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளிலும் பட்டனங்களை வென்றுள்ளது. இந்த ஐந்து முறையும் எம்எஸ் தோனியின் தலைமையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டம் வென்றுள்ளது. மேலும், 2023இல் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் எம்எஸ் தோனி தனது 41வது வயதில் பட்டம் வென்று, ஐபிஎல் பட்டம் வென்ற வயது மூத்த கேப்டன் என்ற பெருமையை கொண்டுள்ளார். இதற்கிடையே, எம்எஸ் தோனி 2023 இறுதிப்போட்டியில் விளையாடியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை இறுதிப்போட்டிகளில் விளையாடிய வீரராகவும் திகழ்கிறார். அவர் இதுவரை 11 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார்.