இந்தியா vs நியூசிலாந்து 3வது டி20 : ஷுப்மன் கில்லால் முறியடிக்கப்பட்ட சாதனைகள்!
ஒயிட்-பால் கிரிக்கெட்டில் தனது அபார பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷுப்மான் கில், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தார். அவர் ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 126 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரது திறமையால் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது. இதன் மூலம், கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 122 ரன்கள் எடுத்த விராட் கோலியின் சாதனையை முறியடித்து, டி20யில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மூன்றாவது டி20 போட்டியில் ஷுப்மன் கில் உடைத்த சாதனைகள்
கில்லின் 126* என்பது இப்போது இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச டி20 ஸ்கோர் ஆகும். சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக, கில் எட்டாவது அதிக தனிநபர் டி20 ஸ்கோரை பதிவு செய்துள்ளார். ஒரு டி20யில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 2015ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 66 பந்துகளை எதிர்கொண்டு ரோஹித் சர்மா இதில் முதலிடத்தில் உள்ளார். சுரேஷ் ரெய்னா 23 வயது மற்றும் 156 நாட்களில் சதமடித்திருந்த நிலையில், 23 ஆண்டுகள் மற்றும் 146 நாட்களில் சதமடித்து கில் இளம் வயதில் சதமடித்த இந்தியர் ஆனார். இதற்கிடையில், கில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த ஐந்தாவது இந்தியரானார்.