
ஐபிஎல் 2025: கடைசி லீக் போட்டியில் வரலாற்று வெற்றியுடன் குவாலிபயர் 1 க்கு தகுதி பெற்றது ஆர்சிபி
செய்தி முன்னோட்டம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) செவ்வாய்க்கிழமை (மே 27) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை (எல்எஸ்ஜி) தோற்கடித்து ஐபிஎல் 2025ன் பிளேஆப் சுற்றில் குவாலிபயர் 1 ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.
லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் வென்றதன் மூலம், இந்த மைதானத்தில் அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங்கையும், ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங்கையும் பதிவு செய்துள்ளது.
எல்எஸ்ஜி அணியில் கேப்டன் ரிஷப் பண்ட் 118 ரன்களும், மிட்செல் மார்ஷ் 67 ரன்களும் எடுத்ததன் மூலம், அந்த அணி 229 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய ஆர்சிபி, ஒரு கட்டத்தில் 90/3 என்ற நிலையில் போராடிக் கொண்டிருந்தது.
பார்ட்னர்ஷிப்
ஜிதேஷ் சர்மா - மயங்க் அகர்வால் பார்ட்னர்ஷிப்
இந்த சூழ்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஸ்டான்ட்-இன் கேப்டன் ஜிதேஷ் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர்.
ஜிதேஷ் 33 பந்துகளில் எட்டு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் உட்பட 85 ரன்கள் எடுத்தார்.
அதே நேரத்தில் மயங்க் அகர்வால் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் சிறப்பாக விளையாடி 19வது ஓவரில் இலக்கை எட்டினர்.
இத்துடன் லீக் சுற்று முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை குவாலிபயர் 1 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளும், வெள்ளிக்கிழமை எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதுகின்றன.