உள்நாட்டில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆனார் ஜடேஜா
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது இந்திய பந்துவீச்சாளர் ஆனார். 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த மோதலில் தனது இரண்டாவது விக்கெட் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஜடேஜா 71 ஆட்டங்களில் சொந்த மண்ணில் 100 ஒருநாள் விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளார். அனில் கும்ப்ளே (126), ஹர்பஜன் சிங் (110), அஜித் அகர்கர் (109), ஜவகல் ஸ்ரீநாத் (103), மற்றும் கபில்தேவ் (100) ஆகியோர் மட்டுமே உள்நாட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் ஆவர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜாவின் செயல்திறன்
ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது இந்தியராக இருந்தாலும், இந்த சாதனையைப் பெற்ற முதல் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாதான் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் 100 விக்கெட்டுகளை எட்டியுள்ள ஜடேஜா, வெளிநாட்டு மைதானங்களில் 71 போட்டிகளில் 52 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். மேலும் நடுநிலை மைதானங்களில் 47 போட்டிகளில் 57 விக்கெட்டுகளுடன் மொத்தமாக 209 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் எடுத்தவர்களில் ஏழாவது இடத்தில் உள்ளார். இந்தியர்களில் கும்ப்ளே (337), ஸ்ரீநாத் (315), அகர்கர் (288), ஜாகீர் கான் (282), ஹர்பஜன் (269), மற்றும் கபில்தேவ் (253) ஆகியோர் மட்டுமே ஜடேஜாவை விட முன்னிலையில் உள்ளனர்.