இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அஸ்வினுக்கு மீண்டும் இடம்? பிசிசிஐ திட்டம்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023ஐ கருத்தில் கொண்டு, ஒருநாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் ரவிச்சந்திரனை மீண்டும் சேர்க்க பிசிசிஐ தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான அறிக்கையின்படி, இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லும் முனைப்புடன் இருப்பதால், அஸ்வினை மீண்டும் கொண்டு வருவதற்கு தேர்வாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் தற்போது ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிப்பதற்கான போட்டியில் உள்ளனர். ஆனால் இருவருமே ஒரே வகையில் பந்துவீசுவதுதான், நிர்வாகத்தின் பார்வையை அஸ்வினின் பக்கம் திருப்பியுள்ளது.
ஆசிய கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்க திட்டம்
இதுவரை 113 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வின் ரவிச்சந்திரன் விளையாடி இருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களாக ஒரு ஒருநாள் போட்டியில் கூட விளையாடவில்லை. மேலும் வியாழக்கிழமை (ஜூலை 27) தொடங்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அஸ்வின் இல்லை. எனினும், அணியில் சுழற்பந்துவீச்சை வலுப்படுத்துவதற்காக அஸ்வினை கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கும் முடிவில் உள்ளதாகவே கூறப்படுகிறது. தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் முடிந்த பிறகு இதுகுறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. அடுத்து நடக்க உள்ள ஆசிய கோப்பை போட்டியில் அஸ்வின் இடம் பெற்றால், ஒருநாள் உலகக்கோப்பையில் அஸ்வின் நிச்சயம் இடம்பெறுவார் என்பதை உறுதி செய்துவிடலாம்.