ரஞ்சி கோப்பை 2024 : கவனத்தில் கொள்ள வேண்டிய டாப் 5 வீரர்கள்
ரஞ்சி கோப்பையின் 2024 சீசன் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் 36 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் விளையாட உள்ளன. இந்த போட்டி முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவில் நடத்தப்படும் இந்தியாவின் முக்கியமான முதல்தர போட்டிகளில் ஒன்றாகும். மேலும், 1934 முதல் விளையாடப்படும் இந்த தொடர் இந்தியாவின் பழமையான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், 2024 சீசனில் அஜிங்க்யா ரஹானே, மயங்க் அகர்வால், புவனேஷ்வர் குமார் மற்றும் செத்தேஷ்வர் புஜாரா போன்ற பல பிரபலமான வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் கவனிக்க வேண்டிய டாப் 5 வீரர்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
கர்நாடக அணிக்கு தலைமை தாங்கும் மயங்க் அகர்வால்
2024 ரஞ்சி கோப்பையில் கர்நாடகா கிரிக்கெட் அணியை வழிநடத்தும் பொறுப்பைத் தவிர, மயங்க் அகர்வால் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு அதிக ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த சீசனில் மயங்க் அகர்வால் 82.50 என்ற உச்சபட்ச சராசரியுடன் 990 ரன்களை எடுத்தார். இதில் மூன்று சத்தங்களும் அடங்கும். ஒட்டுமொத்தமாக, 94 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள மயங்க் அகர்வால், 45.93 என்ற சராசரியில் 7,120 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், இந்திய கிரிக்கெட் அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, நான்கு சதங்கள் மற்றும் ஆறு அரைசதங்களை அடித்துள்ளார்.
சௌராஷ்டிரா அணியின் சிறந்த வீரர் தர்மேந்திரசிங் ஜடேஜா
கடந்த சீசனில் சௌராஷ்டிரா அணிக்காக சிறப்பாக செயல்பட்டவர்களில் ஒருவர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தர்மேந்திரசிங் ஜடேஜா ஆவார். அந்த சீசனில் பத்து போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், பேட்டிங்கிலும் 298 ரன்களையும் குவித்தார். கடந்த சீசனில் ரஞ்சி கோப்பையை சௌராஷ்டிரா வென்றதற்கு அவரும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், ஜடேஜா 77 முதல் தர போட்டிகளில் 1,780 ரன்களுடன் 313 விக்கெட்டுகளையும், 6 அரைசதங்களையும் விளாசியுள்ளார்.
ரஞ்சி கோப்பையில் விளையாடும் மூத்த வீரர் செத்தேஷ்வர் புஜாரா
இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு செத்தேஷ்வர் புஜாரா இந்த சீசனில் சவுராஷ்டிரா அணிக்கு திரும்ப உள்ளார். 35 வயதான செத்தேஷ்வர் புஜாரா, முதல்தர கிரிக்கெட்டில் 60 சதங்கள் மற்றும் 77 அரைசதங்கள் மூலம் 51.36 என்ற சராசரியில் 19,569 ரன்களை வைத்துள்ளார். மேலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 103 போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 19 சதம் மற்றும் 35 அரைசதங்கள் அடித்து 7,195 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புஜாரா இந்தியாவில் முதல்தர கிரிக்கெட்டில் மொத்தமாக 58.08 சராசரியுடன் 12,372 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்கால் அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்
முகமது ஷமி மற்றும் முகேஷ் குமார் இல்லாத நிலையில், ஆகாஷ் தீப் வரவிருக்கும் ரஞ்சி கோப்பையில் பெங்கால் அணியின் பந்துவீச்சை முன்னின்று வழிநடத்த உள்ளார். கடந்த சீசனில் அவர் 10 போட்டிகளில் 41 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் முறை மூன்று ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவரது பந்துவீச்சு கடந்த சீசனில் பெங்கால் அணி இறுதிப் போட்டிக்கு வர முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ் மொத்தம் 26 முதல் தர போட்டிகளில் நான்கு முறை ஐந்து விக்கெட்டுகளுடன் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் சாய் சுதர்சன்
இந்தியாவின் வளர்ந்து வரும் திறமையாளர்களில் ஒருவரான சாய் சுதர்சன், வரவிருக்கும் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட ஆர்வமாக உள்ளார். இளம் வீரரான சாய் சுதர்சன் கடந்த சீசனில் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக ஏழு போட்டிகளில் இருந்து 572 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும். முன்னதாக, அவர் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஒரு நாள் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார். இந்நிலையில், ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்படுவதன் மூலம், இந்திய அணியில் நிலையான இடத்தை பெறும் முயற்சியில் உள்ளார். ஒட்டுமொத்தமாக, சாய் சுதர்சன் முதல்தர கிரிக்கெட்டில் 41.57 சராசரியில் 873 ரன்கள் எடுத்துள்ளார்.