IPL 2024 : ஆவேஷ் கானை கைமாற்றி தேவ்தத் படிக்கலை வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
ஐபிஎல் 2024 வர்த்தக சாளரத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து வாங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக புதன்கிழமை (நவம்பர் 22) தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்டர் தேவ்தத் படிக்கலை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக ஆவேஷ் கானை வாங்குகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் நடைபெறும் வீரர்கள் ஏலத்திற்குச் செல்வதற்கு முன், தக்கவைக்கப்பட்ட வீரர்களின் இறுதிப் பட்டியலை ஐபிஎல் உரிமையாளர்கள் நவம்பர் 26 ஆம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், அணியில் தக்கவைக்கும் வீரர்களின் இறுதிப்பட்டியலை தயாரிக்கும் பணியில் அணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
10 கோடிக்கு வாங்கப்பட்ட ஆவேஷ் கானை கைமாற்றுவது ஏன்?
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ரூ.10 கோடி கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டாலும், ஆவேஷ் கான் ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. போட்டி முழுவதும் சேர்த்து வெறும் 8 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். இதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய தேவ்தத் படிக்கல் 11 இன்னிங்ஸ்களில் 2 அரைசதங்களுடன் வெறும் 261 ரன்களை மட்டுமே எடுத்தார். இரு வீரர்களும் மற்றும் அணிகளும் வர்த்தக பரிமாற்றத்திற்கு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அடுத்த சில தினங்களில் பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸிலிருந்து ரொமாரியோ ஷெப்பர்டை மும்பை இந்தியன்ஸ் ஒப்பந்தம் செய்த பிறகு இது இரண்டாவது வர்த்தகமாகும்.