LSG அணியின் மென்டாராக இணையும் ராகுல் டிராவிட்?
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், 2024 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மென்டாராக இணையலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், மேற்கொண்டு தலைமைப் பயிற்சியாளராக அவர் தொடர விரும்பவில்லை என்றே தெரிகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக் காலத்தில், இந்திய அணி அனைத்து விதமான ஃபார்மெட்களிலும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
மேலும், கடந்த உலகக்கோப்பைத் தொடரிலும் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்று அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் டிராவிட்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் ராகுல் டிராவிட்:
கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மென்டாராக செயல்பட்டு வந்த கௌதம் காம்பீர், 2024 ஐபிஎல் சீசனுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டாராக இணைந்திருக்கிறார்.
லக்னோ அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஆண்டி பிளவர்ஸூம் மாற்றப்பட்டு, புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடராத பட்சத்தில், லக்னோ அணியின் மென்டாராகவே அவர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இதற்கிடையில் தன்னுடைய முந்தைய அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மென்டாராக இணைவது குறித்து அந்த அணியுடன் ராகுல் டிராவிட் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் புதிய மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.