ராச்சின் ரவீந்திராவுக்கு மீண்டும் இடம்; வங்கதேச தொடருக்கான நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு
நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ராச்சின் ரவீந்திரா நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி மேற்கொள்ள உள்ள வங்கதேச சுற்றுப்பயணத்திற்காக அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். தற்போது இந்தியாவில் நடந்து வரும் ஒருநாள் உலகக்கோப்பையில் மூன்று சதங்களை அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 23 வயதான ரவீந்திரா, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்து அணிக்காக மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கடைசியாக விளையாடினார். அதன் பிறகு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போராடிய நிலையில், வங்கதேச மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிக சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்துள்ள நியூசிலாந்து
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய மிட்செல் சான்ட்னர், அஜாஸ் படேல் மற்றும் இஷ் சோதி ஆகியோரை ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்களாக நியூசிலாந்து அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வங்கதேச கிரிக்கெட் அணியுடன் அந்நாட்டில் இருதரப்பு தொடரில் விளையாட செல்கிறது. முதல் டெஸ்ட் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 28ஆம் தேதி தொடங்குகிறது. நியூசிலாந்து அணி : டிம் சவுத்தி, டாம் ப்ளூன்டெல், டெவோன் கான்வே, மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லாதம், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, கேன் வில்லியம்சன், வில் யங்.