INDvsSA இரண்டாவது டெஸ்டில் இருந்து ககிசோ ரபாடா விலகல்; தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவு
செய்தி முன்னோட்டம்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா, இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். தொடக்கப் போட்டிக்கு முன்னதாகப் பயிற்சியின் போது விலா எலும்பில் ஏற்பட்ட காயம் முழுமையாகக் குணமடையாததால், அவர் கௌஹாத்தியில் சனிக்கிழமை (நவம்பர் 22) தொடங்கும் இப்போட்டியில் பங்கேற்க மாட்டார் என அணியின் கேப்டன் டெம்பா பவுமா உறுதிப்படுத்தியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் ரபாடா விளையாடவில்லை. இருப்பினும், தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ரபாடா விலகியது, இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சுத் தாக்குதலுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்.
மாற்று வீரர்
ககிசோ ரபாடாவுக்கு மாற்று வீரர்
ரபாடாவுக்குப் பதிலாக ஆடும் லெவனில் யாரை சேர்ப்பது என்பது குறித்து அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. கௌஹாத்தி ஆடுகளம் குறித்துப் பேசிய டெம்பா பவுமா, "இது வழக்கமான இந்தியத் துணைக் கண்ட ஆடுகளம் போலத் தெரிகிறது. முதல் இரண்டு நாட்களுக்கு பேட்டிங்கிற்குச் சாதகமாகவும், அதன்பிறகு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாகவும் இருக்கும்." என்று கருத்து தெரிவித்தார். கொல்கத்தா மைதானத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆடுகளம் புதிதாகவும், சீராகவும் இருக்கும் என்று அவர் கூறினார். பார்சபாரா மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால், இரு அணிகளுக்கும் இது ஒரு சவாலான களமாக இருக்கும். இந்த ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப ரபாடாவுக்குப் பதில் அணியில் மாற்றம் செய்யப்படும் என்று பவுமா மேலும் தெரிவித்தார்.