ஐபிஎல் மெகா ஏலத்திற்கு புதிய விதிகள்; ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட புதிய தகவல்
ஐபிஎல் 2025க்கான மெகா ஏலம் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகும் நிலையில், ஏலத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில் கிரிக்கெட் வல்லுநர் பிரசன்னாவுடன் நடத்திய விவாதத்தில், வீரர்கள் தக்கவைப்பது குறித்து பேசினார். அதில், ஐபிஎல் 2025க்கான வீரர்கள் தக்கவைத்து விதிகளை வெளியிடுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது எனத் தெரிவித்த அஸ்வின், 4 வீரர்களை ஒரு அணி தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறினார். மேலும் 2 RTM வீரர்களை தக்கவைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இந்த தக்கவைப்பில் உள்நாட்டு, வெளிநாட்டு, அன்கேப்ட் வீரர் என்ற எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனுமதிக்கப்பட உள்ளதாக கூறினார்.
வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிப்பதை தடுக்க புதிய முயற்சி
வீரர்கள் தக்கவைப்பதில் எந்த கட்டுப்பாடும் வழங்கப்படாது என அவர் கூறிய நிலையில், வெளிநாட்டு வீரர்கள் குறித்த அப்டேட் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதாவது, ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு, வெளிநாட்டு வீரர்கள் போட்டியின்போது விளையாடாமல் புறக்கணிப்பதை தடுக்கவும் ஐபிஎல் நிர்வாகம் விதிகளை கொண்டுவர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தனது சேனலில் ஐபிஎல் குறித்த தகவல் தவிர, ஜெய் ஷா ஐசிசி தலைவரானது, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இடையேயான டெஸ்ட் போட்டிகள் உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்பான பல்வேறு தகவல்களையும் விவாதித்தார். இதற்கிடையே, அஸ்வின் கூறியபடி ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்கள் தக்கவைப்பு விதிகள் அமலானால் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்தவித சிக்கலும் இல்லாமல் இந்த சீசனில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.