உதய்பூரில் வெங்கட தத்தா சாயை மணந்தார் பி.வி.சிந்து; வெளியான புகைப்படங்கள்
பேட்மிண்டன் சாம்பியனான பிவி சிந்து, டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை காலை உதய்பூரில் நடைபெற்ற பாரம்பரிய தெலுங்கு விழாவில் வெங்கட தத்தா சாயியை திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் சூழப்பட்ட இந்த ஜோடி ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் செய்து கொண்டது. இந்த ஜோடி இன்னும் அதிகாரப்பூர்வ புகைப்படங்களைப் பகிரவில்லை என்றாலும், நிகழ்வின் பல காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. குறிப்பாக, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இந்த விழாவின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து புதுமணத் தம்பதிகளுக்கு தனது ஆசிகளை வழங்கினார்.
நாளை ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி
PV சிந்துவும், தத்தா சாய்வும் டிசம்பர் 24 ஆம் தேதி சிந்துவின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் ஒரு வரவேற்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். திருமண விழாக்கள் டிசம்பர் 20 அன்று சங்கீத் விழாவுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஹல்டி, பெல்லிகுத்துரு மற்றும் மெஹந்தி சடங்குகள் நடைபெற்றது. திருமணத்திற்கு, சிந்து ஒரு அழகிய க்ரீம் நிற புடவையை அணிந்திருந்தது புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அவரது மணமகன் பொருத்தமான கிரீம் ஷெர்வானியில் கம்பீரமாக தோற்றமளித்தார். இருவரின் குடும்பங்கள் ஒருவரையொருவர் நீண்ட காலமாக அறிந்தவர்கள் என PV சிந்துவின் தந்தை முன்னதாக தெரிவித்திருந்தார்.