இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலுக்கு மீண்டும் தற்காலிக தடை
ஏற்கனவே தாமதமாகி வரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், வெள்ளிக்கிழமை தேர்தலுக்கு தடை விதித்தது. 8 மாதங்களாக பாலியல் சர்ச்சைகளில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் இந்திய மல்யுத்த வீரர்களின் தொடர் எதிர்ப்புகள் மற்றும் பல்வேறு மாநில சங்கங்களின் சட்ட மனுக்கள் காரணமாக, பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இறுதியாக மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவில் உள்ள 15 பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டது. இதில், பாலியல் குற்றச்க்காட்டை எதிர்கொண்டுள்ள இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் உட்பட 4 பேர் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஹரியானா மல்யுத்த சங்கம் மனுத்தாக்கல்
பாராளுமன்ற உறுப்பினர் தீபிந்தர் ஹூடா தலைமையில் இயங்கும் ஹரியானா மல்யுத்த சங்கம் இந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளதோடு, ஹரியானா ஒலிம்பிக் சங்கத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் விதிகளின்படி, ஒரு மாநில சங்கம் அதன் தேர்தல்களில் வாக்களிக்க இரண்டு உறுப்பினர்களை அனுப்பலாம். ஹரியானா அமெச்சூர் மல்யுத்த சங்கம் தாங்களும் இந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்துள்ளதால் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இருப்பதாக கூறியுள்ளது. ஆனால், அது ஹரியானா ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் வாக்களிக்கும் உரிமை இல்லை எனக் கூறி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஹரியானா மல்யுத்த சங்கம் மனுத்தாக்கல் செய்தது. இதையடுத்து வழக்கின் விசாரணைக்காக தேர்தலை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.