லியோனல் மெஸ்ஸிக்கு விளையாட தடை விதித்தது பிஎஸ்ஜி கிளப்
லியோனல் மெஸ்ஸிக்கு பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்து கிளப் இரண்டு வார தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, சவூதி அரேபியாவுக்கு பிஎஸ்ஜி கிளப்பின் அனுமதியின்றி மெஸ்ஸி பயணம் செய்ததால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) லீக் 1 இல் லோரியண்டிற்கு எதிராக பிஎஸ்ஜி தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்தது. இதில் பிஎஸ்ஜிக்காக மெஸ்ஸி 90 நிமிடங்கள் விளையாடினார். போட்டிக்கு பிறகு தனது வணிக வேலைக்காக சவூதி அரேபியாவுக்கு பயணம் செய்ய அனுமதி கேட்டிருந்தார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும், அவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்தார். சவூதி அரேபியாவின் சுற்றுலாத் தூதராகப் பணியாற்றுகிறார்.
பிஎஸ்ஜி அணியில் மெஸ்ஸியின் கேரியர் முடிவுக்கு வருகிறதா?
கிளப்பின் அனுமதி இல்லாமல் லியோனல் மெஸ்ஸி சவுதி அரேபியா சென்றதால், அவரை ஒழுங்குபடுத்துவதற்கான ஒழுங்கு நடவடிக்கையாக இரண்டு வார தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வார காலத்திற்கு மெஸ்ஸிக்கு விளையாடுவதற்கும் குழுப் பயிற்சியில் பங்கேற்கவும் அனுமதியில்லை. மேலும் அதற்கான ஊதியமும் வழங்கப்படாது. மெஸ்ஸியின் இடைநீக்கம் முடிந்ததும், பிஎஸ்ஜிக்கு இன்னும் மூன்று போட்டிகள் மீதமுள்ளன. இதற்கிடையே மெஸ்ஸியின் பிஎஸ்ஜி அணியுடனான இரண்டு வருட ஒப்பந்தம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. ஒப்பந்தத்தை புதுப்பிக்க மெஸ்ஸி ஆர்வம் காட்டாததால், அவர் பிஎஸ்ஜியிலிருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.