பிரபல மல்யுத்த வீரர் பெஞ்சமின் சடர்லி காலமானார்; போட்டி முடிந்த சில மணி நேரங்களில் சோகம்
செய்தி முன்னோட்டம்
உலக மல்யுத்த அரங்கில் பெக் (PAC) என்ற மேடைப் பெயரால் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட பிரபல பிரிட்டிஷ் மல்யுத்த வீரரான பெஞ்சமின் சடர்லி (40), அமெரிக்காவின் சிகாகோவில் திடீரென உயிரிழந்தார். சிகாகோ நகரில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் நேற்று ஆக்ரோஷமாக களமிறங்கி போட்டியிட்ட இவர், போட்டி நிறைவடைந்து தங்கும் விடுதிக்குத் திரும்பிய சில மணி நேரங்களிலேயே எதிர்பாராதவிதமாக மரணமடைந்துள்ளது சர்வதேச மல்யுத்த ரசிகர்களையும் சக வீரர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மர்மம்
ரிங்கில் மிரட்டிய வீரரின் மர்ம மரணம்
வான்வழி சாகசங்கள் மற்றும் அசாத்திய உடல்திறன் கொண்ட அசைவுகளால் மல்யுத்த ரிங்கில் எதிராளிகளை திணறடிப்பவராக வலம் வந்த பெஞ்சமின் சடர்லிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
சிகாகோவில் நடைபெற்ற போட்டிக்குப்பின் உற்சாகமாகவே காணப்பட்ட அவர், சில மணி நேரங்களுக்குள் திடீரென உயிரிழந்தது மர்மமாகவே நீடிக்கிறது.
அவரது திடீர் மறைவுக்கான மருத்துவக் காரணம் அல்லது உடற்கூறாய்வு முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை சிகாகோ நகர காவல்துறையோ அல்லது போட்டி அமைப்பாளர்களோ இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இளம் வயதிலேயே உலகத்தரம் வாய்ந்த பல மல்யுத்த சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று தனக்கெனத் தனி முத்திரை பதித்த பெக்-கின் மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச மல்யுத்த பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றன.