2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்கெடுத்த அணிகள் பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு?
கடந்த ஞாயிறு அன்று (நவம்பர் 19), இந்தியாவை வீழ்த்தி 2023ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை வென்றது ஆஸ்திரேலியா. இந்த உலகக்கோப்பைத் தொடரில் ரசிகர்களே எதிர்பாராத வகையில் பல்வேறு போட்டிகள் அமைந்தது ஆச்சரியம். ஆதிக்கம் செலுத்தும் எனக் கணிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு, மிக மோசமான உலகக்கோப்பை தொடராக அமைந்துவிட்டது இந்தத் தொடர். எதிர்பாராத வகையில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து போன்ற சிறிய அணிகளுக்கு இதுவொரு நினைவு கூறத்தக்க உலகக்கோப்பையாக அமைந்து விட்டது. இந்தத் தொடரில் பெரிய அணிகளையே வீழ்த்தி நாங்களும் போட்டியில் இருக்கிறோம் என சொல்லாமல் சொல்லி விட்டன சிறிய அணிகள். சரி, இந்த உலகக்கோப்பையில் பங்கெடுத்த அணிகளுக்கான பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
தொடரில் பங்கெடுத்த அணிகளுக்கான பரிசுத்தொகை:
உலகக்கோப்பைத் தொடரில் வெற்று பெற்று கோப்பையை ஏந்திய ஆஸ்திரேலிய அணி 4.28 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.35.67 கோடி) பரிசுத்தொகையாகப் பெற்றிருக்கிறது. இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி பரிசுத்தொகையாக 2.36 மில்லியன் டாலர்களை (தோராயமாக 19.67 கோடி ரூபாய்) பெற்றிருக்கிறது. மூன்றாம் இடம் பிடித்த தென்னாப்பிரிக்க அணிக்கு 1.08 மில்லியன் டாலர்களும் (ரூ.9 கோடி), நியூசிலாந்து அணிக்கு 1 மில்லியன் டாலர்களும் (ரூ.8.33 கோடி) பரிசுத்தொகையாக அளிக்கப்பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 2,60,000 டாலர்களும் (ரூ.2.16 கோடி), இங்கிலாந்து அணி 2,20,000 டாலர்களும் (ரூ.1.83 கோடி) பெற்றிருக்கிறது. கடைசியாக வந்த பங்களாதேஷ், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு 1,80,000 டாலர்களை (ரூ.1.50 கோடி) பரிசுத்தொகையாகப் பெற்றிருக்கின்றன.