LOADING...
ஐபிஎல் 2026: மைதானத்தில் மோதிக்கொண்ட பிரின்ஸ் யாதவ்-டிரிஸ்டன் ஸ்டப்ஸ்! வைரலாகும் வீடியோ; லக்னோvsடெல்லி போட்டியில் பரபரப்பு
மைதானத்தில் மோதிக்கொண்ட பிரின்ஸ் யாதவ் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ்

ஐபிஎல் 2026: மைதானத்தில் மோதிக்கொண்ட பிரின்ஸ் யாதவ்-டிரிஸ்டன் ஸ்டப்ஸ்! வைரலாகும் வீடியோ; லக்னோvsடெல்லி போட்டியில் பரபரப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 02, 2026
06:58 am

செய்தி முன்னோட்டம்

லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையிலான ஐபிஎல் 2026 தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் ஒரு எதிர்பாராத மோதல் அரங்கேறியது. டெல்லி அணி பேட்டிங் செய்தபோது, ஐந்தாவது ஓவரை வீசிய லக்னோ வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ், அந்த ஓவரின் 5வது பந்தை வீசிய பிறகு டிரிஸ்டன் ஸ்டப்ஸை நோக்கி ஆக்ரோஷமாகச் சென்றார். இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் முறைத்துப் பார்த்துக்கொண்டதால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

பதிலடி

சளைக்காமல் பதிலடி கொடுத்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ்

இளம் வீரரான பிரின்ஸ் யாதவ், தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டப்ஸை நோக்கி வந்து ஏதோ கூற முயன்றபோது, ஸ்டப்ஸ் சற்றும் தயங்காமல் அவருக்குப் பதிலடி கொடுத்தார். 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி தடுமாறிக் கொண்டிருந்த அந்த இக்கட்டான நேரத்தில், லக்னோ வீரர்கள் டெல்லி பேட்டர்களுக்குக் கடும் மனரீதியான அழுத்தத்தைக் கொடுக்க முயன்றனர். ஆனால், ஸ்டப்ஸ் அந்த அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் களத்தில் உறுதியாக நின்றார். இந்த மோதல் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், போட்டியின் விறுவிறுப்பை மேலும் அதிகரித்தது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

கூட்டணி

டெல்லியை மீட்ட ரிஸ்வி - ஸ்டப்ஸ் கூட்டணி

மைதானத்தில் நிலவிய பதற்றமான சூழலையும் மீறி, சமீர் ரிஸ்வி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி டெல்லி அணியை அபார வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ஆட்டநாயகன் விருது வென்ற சமீர் ரிஸ்வி 47 பந்துகளில் 70* ரன்கள் குவித்து அசத்தினார். மறுபுறம் நிதானமாக ஆடிய ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 39* ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவர்களின் 119* ரன்கள் பார்ட்னர்ஷிப், ஆரம்பத்தில் ஏற்பட்ட விக்கெட் சரிவையும், மைதானத்தில் நிலவிய காரசாரமான சூழலையும் முறியடித்து டெல்லிக்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுத்தந்தது.

Advertisement

நெகிழ்ச்சி

சமீர் ரிஸ்வி அளித்த நெகிழ்ச்சியான பேட்டி

போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் பேசிய சமீர் ரிஸ்வி, "நிலைமை மோசமாக இருந்தபோது நான் ஸ்டப்ஸுடன் பேசினேன். அவர் என்னிடம் 'சிறிது நேரம் எடுத்துக்கொள்வோம், ரன் ரேட் குறைவாகத்தான் உள்ளது, நிதானமாக விளையாடுவோம்' என்று தைரியம் கூறினார்" என்று தெரிவித்தார். மேலும், உள்ளூர் மைதானம் என்பதால் இங்குள்ள சூழல் தனக்கு நன்கு தெரிந்திருந்ததும் வெற்றிக்கு உதவியதாக அவர் கூறினார். 21/2 என்ற நிலையில் களமிறங்கிய ரிஸ்வி, அடுத்த ஓவரிலேயே மேலும் 2 விக்கெட்டுகள் விழுந்தபோது பதற்றமடையாமல் ஆடியது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

பந்துவீச்சு

பந்துவீச்சில் மிரட்டிய இங்கிடி மற்றும் நடராஜன்

முன்னதாக முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 141 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி இங்கிடி மற்றும் தமிழகத்தின் டி.நடராஜன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோவை முடக்கினர். லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் (35) மற்றும் அப்துல் சமது (36) மட்டுமே ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். குல்தீப் யாதவும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தினார். இறுதியில் 17.1 ஓவர்களிலேயே டெல்லி அணி இலக்கை எட்டி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

Advertisement