ப்ரத்திகா ராவல் காயம் காரணமாக வெளியேற்றம்; மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவு
செய்தி முன்னோட்டம்
வரவிருக்கும் முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாக, தொடக்க ஆட்டக்காரர் ப்ரத்திகா ராவல் ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரின் எஞ்சியப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) நவி மும்பையில் நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான குழுநிலை ஆட்டத்தின் போது அவருக்கு ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக அவர் விலகுவதை ஐசிசி திங்கள்கிழமை மாலை உறுதிப்படுத்தியது. வங்காளதேச ஆட்டத்தின் 21வது ஓவரில், ப்ரத்திகா ராவல் எல்லைக் கோட்டிற்கு அருகில் ஈரமான அவுட்ஃபீல்டில் தடுமாறிக் கீழே விழுந்தபோது இந்தக் காயம் ஏற்பட்டது. அவர் தனது கணுக்காலைத் திருப்பிக்கொண்டதால், சக வீராங்கனைகளின் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
ஷஃபாலி வர்மா
ஷஃபாலி வர்மா அணியில் சேர்ப்பு
இந்த நிலையில், அவர் அணியில் இருந்து விலக்கப்படுவது கட்டாயம் ஆனதால், அவருக்குப் பதிலாக இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது வியாழக்கிழமை, அக்டோபர் 30 அன்று நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி மோதவிருக்கும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக, ராவல் விலகியிருப்பது அணிக்குக் கடுமையான இழப்பாகும். இந்தத் தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த ராவல், ஏழு போட்டிகளில் 308 ரன்கள் குவித்து, 51.33 என்ற ஈர்க்கக்கூடிய சராசரியைப் பதிவு செய்திருந்தார். முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிராக அவர் 122 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 75 ரன்களும் எடுத்துச் சிறப்பான ஃபார்மில் இருந்தார்.