85 பதக்கங்களுடன் சாதனை! ஆசிய விளையாட்டுப் போட்டியில் வென்ற இந்திய வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பாராட்டு
செய்தி முன்னோட்டம்
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளைத் டெல்லியில் வியாழக்கிழமை (அக்டோபர் 15) அன்று பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பாராட்டினார். கடந்த 2023 ஹாங்க்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியைப் போலவே இந்தியா தனது 4-வது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரர்களின் உழைப்பைப் பிரதமர் வெகுவாகப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தனிநபர் பிரிவு
வில்வித்தை, மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டையில் அபார வெற்றி
தனிநபர் போட்டிகளில் வில்வித்தை விளையாட்டு இந்தியாவின் மிகப்பெரிய வெற்றித் துறையாக உருவெடுத்தது.
இதில் 5 தங்கம் உட்பட மொத்தம் 9 பதக்கங்களை இந்திய விளையாட்டு வீரர்கள் கைப்பற்றினர். மல்யுத்தப் போட்டிகளில் 2 தங்கம் உட்பட 6 பதக்கங்களும், குத்துச்சண்டைப் போட்டிகளில் 3 தங்கம் உட்பட 6 பதக்கங்களும் இந்தியாவிற்கு கிடைத்தன.
குறிப்பாக பெண்கள் வில்வித்தை அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாடு மற்றும் குத்துச்சண்டை வீரர்களின் தங்கப் பதக்க வெற்றி சர்வதேச அளவில் இந்தியாவின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
குழு விளையாட்டுகள்
குழு விளையாட்டுக்களில் இந்தியா சாதனை
குழு விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிகள் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தின.
ஆண்கள் ஹாக்கி அணி மலேசியாவை 5-1 என்ற கணக்கிலும், பெண்கள் ஹாக்கி அணி சீனாவை 1-0 என்ற கணக்கிலும் வீழ்த்தித் தங்கம் வென்றன.
கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி இலங்கையையும், ஆண்கள் அணி பாகிஸ்தானையும் வீழ்த்தித் தங்கப் பதக்கங்களை கைப்பற்றின.
கபடிப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டும் தங்கப் பதக்கங்களை வென்று வெற்றி நடை போட்டன.
இப்போட்டிகள் இந்தியாவின் ஒட்டுமொத்தத் தங்கப் பதக்க எண்ணிக்கையை உயர்த்தின.
தடகளம்
தடகளம், துப்பாக்கி சூடு மற்றும் பழுதூக்குதலில் மைல்கல்
தடகளப் போட்டிகளில் இந்தியா அதிகபட்சமாக 1 தங்கம், 9 வெள்ளி, 14 வெண்கலம் என 24 பதக்கங்களை வென்றது.
இதில் குல்வீர் சிங் 3 பதக்கங்களை வென்று அசத்தினார். துப்பாக்கி சூடு போட்டிகளில் 3 தங்கம் உட்பட 15 பதக்கங்கள் கிடைத்தன.
பழுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு 49 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று, 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் பழுதூக்குதலில் இந்தியாவிற்கான பதக்க வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.