டி20 லீக்கில் புதிய அணிகள் அறிமுகத்தை தள்ளிவைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பிஎஸ்எல்) உள்ள அணிகளின் எண்ணிக்கையை 2025 ஆம் ஆண்டு வரை அதிகரிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது. முன்னதாக, ஐபிஎல்லில் 2022 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தன. இதையடுத்து, ஐபிஎல்லை பின்பற்றி பிஎஸ்எல் 2024 சீசனில் இரண்டு புதிய அணிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக முன்னாள் பிசிபி தலைவர் நஜாம் சேத்தி கூறியிருந்தார். இருப்பினும், அதை செயல்படுத்தப்படுவதற்கு முன்பு, அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.
சட்ட சிக்கலால் புதிய அணிகள் அறிமுகத்தை தள்ளிப்போடும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
2015 இல் மேற்கொண்ட 10 வருட ஒப்பந்தத்தின்படி, தற்போதுள்ள அணி உரிமையாளர்களுடன் எந்தவொரு சட்ட சிக்கல்களையும் உருவாக்குவதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, லீக் வடிவம் அல்லது போட்டி கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டுமானால் அனைத்து தரப்பினரின் ஒப்புதலும் தேவை என்று ஒப்பந்தம் குறிப்பிடுகிறது. தற்போதுள்ள உரிமையாளர்கள் புதிய அணிகளைச் சேர்ப்பதற்கு ஆதரவாக இல்லை என்றும், ஏற்கனவே உள்ள அணி உரிமையாளர்கள் கடினமாக உழைத்ததாகவும், அதன் பலனை புதியவர்கள் பெற விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது, இஸ்லாமாபாத் யுனைடெட், கராச்சி கிங்ஸ், லாகூர் கலாண்டர்ஸ், முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் சல்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஆறு அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.