ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 : பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள பிசிசிஐ மறுப்பு!
2023 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) ஹைப்ரிட் மாடலை ஏற்க முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளதாக தெரிகிறது. மேலும் ஆசிய கோப்பையை முழுமையாக நடுநிலையான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையயும் பிசிசிஐ வைத்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கோப்பையின் 2023 சீசன் ஆகஸ்ட்-செப்டெம்பர் மாதங்களில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடப்பட உள்ளது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான பயிற்சியாக இந்த போட்டி நடக்க உள்ளது. ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் சூழல் உள்ளிட்ட காரணங்களால் ஆசிய கோப்பை போட்டியை நடத்துவது தொடர்பாக பிசிசிஐ மற்றும் பிசிபி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பு நாடுகள் சொல்வது என்ன?
இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என உறுதியாக பிசிசிஐ கூறிவிட்ட நிலையில், பிசிபியின் ஹைபிரிட் மாடலுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் உள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடக்க உள்ள நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நாடுகளின் உறுப்பினர்கள் போட்டியை நேரில் காண இந்தியா வந்துள்ளனர். அவர்களுடன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கலந்தாலோசித்த பின்னர் ஆசிய கோப்பை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே ஆசிய கோப்பையை முழுமையாக வேறு நாட்டுக்கு மாற்றினால், தாங்கள் ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பையை புறக்கணிப்போம் என பிசிபி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.