நடுநிலை மைதானத்தில் இந்தியாவின் ஆசிய போட்டிகள் : பிசிபி தலைவர் நசீம் சேத்தி புதிய தகவல்
ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடக்க உள்ள நிலையில், இந்தியா தனது ஆசிய கோப்பை போட்டிகளை நடுநிலையான இடத்தில் விளையாடலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) முன்மொழிந்துள்ளது என்று அதன் தலைவர் நஜாம் சேத்தி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) தெரிவித்தார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஏசிசி) இது தொடர்பான ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளதாக சேத்தி கூறினார். முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக பிசிசிஐ பாகிஸ்தானுக்கு தனது அணியை அனுப்ப மறுத்து, போட்டியை நடுநிலையான இடத்திற்கு மாற்றுமாறு கோரியது குறிப்பிடத்தக்கது. ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை, செப்டம்பர் 2 முதல் 17 வரை நடைபெறும். இருப்பினும் போட்டிகளின் சரியான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
செய்தியாளர் சந்திப்பில் நசீம் சேத்தி கூறியது என்ன?
நசீம் சேத்தி இது குறித்து கூறுகையில், "எங்கள் அரசாங்கம் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. நாங்கள் இந்தியாவுடன் கெளரவமாக கிரிக்கெட் விளையாட விரும்புகிறோம் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். நாங்கள் ஏசிசி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்." என்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கவுன்சில் கூட்டத்திற்கு அடுத்த மாதம் தனது நாட்டின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி கோவாவுக்கு வருகை தருவது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த உதவும் என்று சேத்தி நம்பிக்கை தெரிவித்தார். அனைத்தும் சாதகமாக நடந்தால் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடப்பதற்கு முன் இந்த சிக்கல் முடிவுக்கு வரும் என்று நம்புவதாக அவர் மேலும் கூறினார்.