தேர்வுக்குழு தலைவராக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா? பாகிஸ்தானில் புது சர்ச்சை
அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் (ஏபிஎல்) செயல்பட்டு வரும் சோஹைல் தன்வீர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜூனியர் பிரிவு தேசிய தேர்வாளராக இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்க விரும்பும் மூத்த தலைமைத் தேர்வாளர் வஹாப் ரியாஸ் மீதும் கவனம் குவிந்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் தேசிய ஜூனியர் அணியின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்ட சோஹைல் தன்வீர், தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் போட்டிகளுக்கான அணிகளை தேர்வு செய்யும் ஒரு முக்கிய பங்கை வகித்து வருகிறார். அமெரிக்க லீக்கில் தன்வீர் ஏற்கனவே செயல்பட்டு வந்தாலும், தற்போது தேசிய ஜூனியர் அணியின் தேர்வாளராக இருந்துகொண்டு அமெரிக்கன் பிரீமியர் லீக்கிலும் தொடர்வது முறையல்ல என்ற குரல்கள் எழுகின்றன.
பாகிஸ்தான் கிரிக்கெட் நலன்களில் முரண்பாடுகள்
அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் இருந்துகொண்டே சோஹைல் தன்வீர் இருப்பதைப் போல், மூத்த தலைமைத் தேர்வாளர் வஹாப் ரியாஸ் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வரவிருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்க உள்ளார். அவர் ஏற்கனவே அதில் பங்கேற்று இருந்தாலும், தேசிய அணியின் தலைமை தேர்வாளராக பதவியேற்ற பிறகு பங்கேற்பதால் சர்ச்சை வெடித்துள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குநரான பிறகு இதர பணிகளில் இருந்து விலகிய முகமது ஹபீஸுடன் ஒப்பிட்டு விமர்சிக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஒரு விளையாட்டு மேலாண்மை நிறுவனத்தில் தொடர்பில் இருந்ததற்காக இன்சமாம் உல் ஹக் சமீபத்தில் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.