காயம் காரணமாக முதல் ஆஷஸ் டெஸ்டில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகல்; ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமனம்
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக, இங்கிலாந்துக்கு எதிரான 2025-26 ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக அதிகாரப்பூர்வமாக விலக்கப்பட்டுள்ளார். பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21 அன்று தொடங்க உள்ளது. பேட் கம்மின்ஸ் தற்போது அவரது கீழ் முதுகில் இடுப்பு எலும்பு அழுத்தம் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பல வாரங்களாக யூகங்கள் நிலவி வந்த நிலையில், அவரது விலகல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில், மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்துவார்.
வெற்றி
வெற்றிகரமான கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்
2021 ஆம் ஆண்டு முதல் ஆறு முறை பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில் அணியை வழிநடத்தியுள்ள ஸ்டீவ் ஸ்மித், அந்த ஆறு ஆட்டங்களில் ஐந்து வெற்றிகளை ஆஸ்திரேலியாவிற்குக் கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட் கம்மின்ஸ் பங்கேற்பாரா என்பதும் நிச்சயமற்றதாகவே உள்ளது. பேட் கம்மின்ஸ் தனது உடல்நலன் குறித்து சமீபத்தில் ஒரு தகவலை வெளியிட்டார். முதல் டெஸ்டில் விளையாட வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று அவர் அக்டோபர் தொடக்கத்தில் கூறினார். அவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஓடுவதாகவும், ஆடுகளத்தில் பந்து வீசத் தொடங்க இன்னும் சில வாரங்கள் தேவை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.