ஐபிஎல் ஏல வரலாற்றில் புதிய உச்சம்; ரூ.20.5 கோடிக்கு பாட் கம்மின்ஸை வாங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் உலகக்கோப்பை 2023 பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் 2024 ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விற்கப்பட்டார். அவரை வாங்க பல அணிகளும் போட்டியிட்ட நிலையில், இறுதியாக ரூ. 20.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் அவரைக் கைப்பற்றியது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஐபிஎல் 2023க்கான ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் ரூ.18.5 கோடி கொடுத்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை வாங்கியதே அதிகபட்ச தொகையாக இருந்தது.
ஐபிஎல்லில் பாட் கம்மின்ஸ் செயல்திறன்
ஐபிஎல்லில், பாட் கம்மின்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளின் ஒரு பகுதியாக இருந்துள்ளார். 2014இல் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூலம் அறிமுகமான பாட் கம்மின்ஸ் 2017இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு சென்றார். பின்னர் மீண்டும் 2020இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே திரும்பினார். இந்த அணிகளுக்காக இதுவரை மொத்தம் 42 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள பாட் கம்மின்ஸ் 8.54 என்ற எகானாமியில் 45 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கம்மின்ஸ் போட்டியில் மூன்று அரைசதங்கள் அடித்துள்ளார். இந்நிலையில், தற்போது சன்ரைசர்ஸ் அணிக்கு இடம் பெயர்கிறார்.