Loading...
பாரா ஆசிய போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு
வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்

பாரா ஆசிய போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 20, 2026
01:57 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் விளையாட்டின் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். வீராங்கனை பேபி சஹானா ரவியின் இந்த சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தி

முதல்வர் விஜய்யின் வாழ்த்துச் செய்தி

"ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

பேபி சஹானா ரவியின் அளப்பரிய கடின உழைப்பும் அர்ப்பணிப்புமே இந்த சாதனைக்கு முக்கியக் காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், இவரது வெற்றி தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் எதிர்காலத்தில் பல வெற்றிகளைக் குவித்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.

ADVERTISEMENT