146 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; பாக். கிரிக்கெட் வீரர் சவுத் ஷகீல் சாதனை
இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது பாகிஸ்தான் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி திங்கட்கிழமை (ஜூலை 24) தொடங்கி நடந்து வருகிறது. முதல் டெஸ்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த சவுத் ஷகீல், இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலும் அரை சதம் கடந்து 57 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், 146 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், தனது முதல் ஏழு போட்டிகளிலும் அரைசதம் கடந்த முதல் பேட்டர் ஆனார். இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் 87.50 அதிகபட்ச சராசரியைக் கொண்டுள்ளார்.
சவுத் ஷகீல் டெஸ்ட் கிரிக்கெட் புள்ளிவிபரம்
27 வயதான சவுத் ஷஹீல் கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் தான் அறிமுகமானார். ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடருக்கு பிறகு, தற்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார். சவுத் ஷகீல் இதுவரை விளையாடிய 13 இன்னிங்ஸ்களில் 37, 76, 63, 94, 23, 53, 22, 55*, 125*, 32, 208*, 30 மற்றும் 57 என ரன்களை எடுத்துள்ளார். இதன் மூலம் இதுவரை விளையாடிய ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அவர் 20 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார். சற்று தாமதமாக தேசிய அணிக்கு வந்தாலும், மிக விரைவாக அணியின் தவிர்க்க முடியாத மிடில் ஆர்டர் பேட்டர்களில் ஒருவராக சவுத் ஷகீல் தற்போது உருவெடுத்துள்ளார்.