இந்த உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்: வாசிம் அக்ரம்
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பைக் குறித்துப் பேசியிருக்கிறார் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம். 1992-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் வெற்றிபெற்று, முதன் முறையாக கோப்பையைக் கையிலேந்தியது பாகிஸ்தான் அணி. அந்த வெற்றி பெற்ற அணியில் முக்கிய பந்து வீச்சாளராக செயல்பட்டு பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்டவர் வாசிம் அகரம். இந்த முறை, பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறார் அவர். மேலும், கடந்த 2019-ல் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, தற்போது வரை ஒன்பது போட்டிகளில் மட்டுமே தோல்வியைத் தழுவியிருக்கிறது பாகிஸ்தான் அணி.
வாசிம் அக்ரம் கூறியது என்ன?
"தற்போது பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் நல்ல உடற்தகுதியுடன் இருந்து, ஒரு திட்டத்துடன் செயல்படும் பட்சத்தில், பாகிஸ்தான் அணி இந்த முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார் அவர். மேலும், தங்களிடம் தரமான அணி இருப்பதாகவும், அந்த அணியை பாபர் அசாம் போன்ற சிறப்பான ஒருவர் வழிநடத்துவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் அவர். அதோடு, துணைக்கண்ட சூழ்நிலை தங்களுக்கு சாதகமான ஒன்று எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் முதல் 5 இடங்களில் மூன்று இடங்களை பாகிஸ்தான் வீரர்களே பிடித்திருக்கிறார்கள். ஒருநாள் போட்டிகளில் அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.