உண்மையை வெளிப்படுத்தியதற்கு பரிசு: பாகிஸ்தான் ஹாக்கி கேப்டன் அம்மத் பட்டிற்கு 2 ஆண்டுகள் தடை
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் ஹாக்கி அணியின் கேப்டன் அம்மத் பட் மீது பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது நிலவிய குளறுபடிகள் குறித்து வாரியத்தின் மீது அவர் சுமத்திய கடுமையான புகார்களைத் தொடர்ந்து, ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் ஹாக்கி வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் அணி மைதானத்திற்கு வெளியேயும் பல சவால்களைச் சந்தித்ததாக அம்மத் பட் குற்றம் சாட்டியுள்ளார். சிட்னி விமான நிலையத்தில் 12 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாகவும், ஹோட்டல் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டதால் வீரர்கள் தெருக்களில் அலைய நேரிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ராஜினாமா
வாரியத் தலைவர் ராஜினாமா
எல்லாவற்றிற்கும் மேலாக, "வீரர்கள் தங்கியிருந்த இடத்தில் சமையலறையை சுத்தம் செய்யவும், பாத்திரங்களைக் கழுவவும் கட்டாயப்படுத்தப்பட்டனர்" என்ற அவரது புகார் விளையாட்டுத் துறை மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் சர்ச்சைகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் தாரிக் புக்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நிதி நெருக்கடி மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்துப் பேசிய அவர், விளையாட்டு வாரியத்திடம் இருந்து நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதே பல குளறுபடிகளுக்குக் காரணம் என்று விளக்கமளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் அந்நாட்டுப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பின்னடைவு
தரவரிசையில் முன்னேற்றமும் பின்னடைவும்
தனது பதவிக்காலத்தில் பாகிஸ்தான் ஹாக்கி அணியின் உலகத் தரவரிசை 18 வது இடத்தில் இருந்து 13 வது இடத்திற்கு முன்னேறியுள்ளதை சுட்டிக்காட்டிய தாரிக் புக்டி, கடினமான சூழலிலும் ஹாக்கியை மேம்படுத்த முயன்றதாகத் தெரிவித்தார். இருப்பினும், தற்போதைய கேப்டன் மீதான தடை மற்றும் நிர்வாகக் குழப்பங்கள் பாகிஸ்தான் ஹாக்கியின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று அந்நாட்டு விளையாட்டுத் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர். இந்தத் தடையை எதிர்த்து அம்மத் பட் மேல்முறையீடு செய்வாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.