இந்தியா மீது ஐசிசியிடம் புகாரளித்திருக்கும் பாகிஸ்தான், ஏன்?
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த அக்டோபர் 14ம் தேதியன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாதிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தாயசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்திய அணி. அன்றைய போட்டியின் போது விக்கெட்டை இழந்து அறைக்கு திரும்பிய பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து, இந்திய ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டிருக்கின்றனர். இந்தக் குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற காணொளியானது இணையத்தில் வைரலாகப் பரவி விவாதத்தை எழுப்பியிருந்தது. இந்நிலையில், ரசிகர்களின் குறிப்பிட்ட நடவடிக்கை தொடர்பாக ஐசிசியிடம் புகார் அளித்திருப்பதாக தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புகார்கள்:
குறிப்பிட்ட என்ன விதமாக புகார் அளித்ததாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறிப்பிடவில்லை. இந்த சம்பவத்தைத் தவிர்த்து மேலும் சில விஷயங்கள் தொடர்பாகவும் ஐசிசியிடம் இந்தியா குறித்து புகாரளித்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். நடப்பு உலக கோப்பை தொடரில் கலந்து கொள்ள இந்தியா வருவதற்காக விண்ணப்பித்திருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கான விசாக்களை வழங்குவதை தாமதமாக்கியது மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கான விசாக்களை வழங்க எந்தவொரு வசதியும் இல்லாதது குறித்தும் ஐசிசியிடம் புகாரளித்திருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். மேற்கூறிய வகையில் பாகிஸ்தான் வீரர்கள் மீதான இந்திய ரசிகர்களின் நடவடிக்கையை குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளாரன மைக்கி ஆர்தர்.