பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஷாஹீன் அப்ரிடி நியமனம் என தகவல்
2023 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் இலங்கையிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்து வெளியேறியது. முன்னதாக, ஆசிய கோப்பை தொடங்கும் முன் ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 அணியாக இருந்த நிலையில், இந்த தோல்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கிடையே, இந்த தொடரில் மூத்த வீரர்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை என பாபர் அசாம் கோபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவிடம் 228 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற படுதோல்விக்கு பிறகு அணியின் டிரெஸ்ஸிங் அறையில் பாபர் மூத்த வீரர்களை திட்டித் தீர்த்துள்ளார். அப்போது ஷாஹீன் அப்ரிடி குறுக்கிட்டு சமாதானப்படுத்தினாலும், அணியில் யார் செயல்படுகின்றனர் என்பது தனக்கு தெரியும் என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அணியின் துணைக் கேப்டனாக ஷதாப் கானுக்கு பதில் ஷாஹீன் அப்ரிடி நியமனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்து ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள நிலையில், அணியின் துணைக் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷதாப் கான் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இல்லை மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலுக்கு ரன்களை வாரி வழங்கினார். இதனால் அணி நிர்வாகம் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடிக்கு அணியின் துணை கேப்டன் பொறுப்பை வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 23 வயதே ஆன ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தானுக்காக 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 86 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.