ஆசிய கோப்பையில் இந்தியா வென்றாலும், பாகிஸ்தான் நம்பர் 1 அணியாக மாறும், எப்படி தெரியுமா?
2023 ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கையை இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தாலும், பாகிஸ்தான் மீண்டும் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 அணியாக முடியும் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா தரவரிசையில் முதலிடத்திற்குச் செல்ல அருமையான வாய்ப்பு கிடைத்த நிலையில், ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்திடம் தோற்று அந்த வாய்ப்பை இழந்துள்ளது. தற்போது 114 ரேட்டிங் புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நம்பர் 1 அணியாக ஆசிய கோப்பையில் நுழைந்தாலும், சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கையிடம் தோற்றதால் அந்த இடத்தை இழந்தனர்.
பாகிஸ்தான் முதலிடத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள்
தற்போது, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஆகிய இரண்டும் தலா 115 ரேட்டிங் புள்ளிகளுடன் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால், பாகிஸ்தான் நேரடியாக முதலிடத்திற்கு முன்னேறும். பாகிஸ்தான் முதலிடத்திற்கு முன்னேறுவதில் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி எந்த பங்கும் வகிக்காது. இதற்கிடையே, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளதால், தொடரை வெல்வதற்கான போட்டியாக கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி மாறியுள்ளது.